Thursday, February 09, 2017

வானொலி மூலம் போக்குவரத்து தகவல்கள்

தேசிய நெடுஞ்சாலைகளின் போக்குவரத்து தொடர்பான தகவல்களை வானொலி மூலம் உடனுக்குடன் ஒலிபரப்பும் வகையிலான சேவை விரைவில் தொடங்கப்படும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

இதுகுறித்து மக்களவையில் வியாழக்கிழமை கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்து நிதின் கட்கரி பேசியதாவது:
தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்துகள், வாகன நெரிசல்களால் ஏற்படும் சிரமங்கள் ஆகியவற்றை தவிர்ப்பதற்காக வானொலி சேவையைப் பயன்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

தேசிய நெடுஞ்சாலைகளின் போக்குவரத்து நிலவரம், வானிலை, விபத்துகள், சுங்கச்சாவடிகளில் காத்திருக்கும் நேரம் உள்பட அனைத்து விவரங்களும் இச்சேவையின் கீழ் ஒலிபரப்பப்படும். இந்த தகவல்களை அகில இந்திய வானொலி மூலம் ஒலிபரப்ப திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக, நாட்டில் உள்ள பல்வேறு நெடுஞ்சாலைகளில் "நெடுஞ்சாலை வானொலி சேவையை' அரசு தொடங்கவுள்ளது. இத்திட்டத்துக்கு உலக வங்கியின் தொழில்நுட்பப் பிரிவு நிதி வழங்குகிறது. முதல்கட்டமாக, 13 நெடுஞ்சாலைகளில் இந்த சேவைகள் தொடங்கப்படும். பின்னர், மற்ற தேசிய நெடுஞ்சாலைகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும்.

இத்திட்டத்தின் சோதனை ஓட்டமாக, தில்லி - ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில் இந்தச் சேவை கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது என்றார் நிதின் கட்கரி. (நன்றி: தினமணி 9.2.2017)

No comments: