Sunday, February 12, 2017

ஆகாஷ்வாணி, செய்திகள் வாசிப்பது...

காதோடுதான் நான் பேசுவேன்!

"ஆகாஷ்வாணி, செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயண ஸ்வாமி. அமெரிக்காவில், ப்ரூக்ளின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர்., பூரண குணமடைந்து, ஓரிரு நாளில், சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது...' இந்த வார்த்தைகளை கேட்டவுடன், மனதுக்குள் வந்து செல்வது, வானொலியும், அந்த கணீர் குரலில் ஒலிக்கும் வசீகரமும் தான்.

வாட்ஸ் அப், பேஸ்புக், டிவிட்டர் என, நவீன தொழில்நுட்பத்தின் வளர்ச்சியில், அது காட்டும் மாயஜால காட்சிகளில், எந்தவிதமான ஆச்சரியங்களும் அற்றுப்போன மனிதர்களாக, நாம் மாறி வருகிறோம். 

"அட' என, எதையும் பார்த்து வியக்காத அளவுக்கு, மனித மனங்கள் மரத்து போய்விட்டன. ஆனால், 40 ஆண்டுகளுக்கு முன், வீடுகளில் ஒலிக்கும் வானொலி பாடல்களும், உரையாடல்களும், கேட்க இனிமையானவை. வானொலிக்குள் இருந்து வரும் உரையாடல்களை, பேச்சுகள், "வானொலிக்குள் யாரோ இருந்து கொண்டு பேசுகிறார்கள்,' என, அசட்டுத்தனமாக நினைத்த அப்பாவி மக்கள், நிறைய பேர் உண்டு.
இன்றைக்கு, 40 வயதை தாண்டிய பலருக்கும், வானொலி கேட்ட அனுபவங்கள், எப்போது நினைத்தாலும், பசுமையான நினைவுகளாக நெஞ்சில் நிழலாடி கொண்டிருக்கும். கம்ப்யூட்டர், "டிவி', மொபைல் போன் என, நாள் முழுவதும் ஏராளமான நேரத்தை, நாம் தொலைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், அன்று வானொலி கேட்டதால் எந்த வேலையும் கெட்டதில்லை. வீட்டு வேலைகளை பெண்கள் செய்தனர்; உணவு சமைத்தனர்; கால்நடைகளை மேய விட்டனர். பாடல்களை கேட்டபடி, பூக்கடைகளில் பூத்தொடுத்தனர்; ஆண்கள், தங்களது பணிகளில் ஈடுபட்டுக்கொண்டே, வானொலியை ரசித்து வ(ச)ந்த காலம் அது. கிரிக்கெட் போட்டிகளின் போது, வானொலியில், "ஸ்கோர்' கேட்பது என்பது, அலாதியான சுகம்.

இன்று, பண்பலை எனப்படும் எப்.எம்., வானொலிகள் இருந்தாலும், பெரும்பாலும் பேச்சும், இரைச்சலான பாடல்களும் மட்டுமே கேட்க முடிகிறது. அந்நாளில், காலை, மாலை நேரங்களில் விவசாயிகளுக்கான அறிவிப்புகள், செய்திகள், பழைய, புதிய சினிமா பாடல்கள், நாடகம், புதினம் வாசித்தல், ஞாயிறு தினங்களில் திரைப்பட ஒலிச்சித்திரம், சிறுவர் பூங்கா, இசை நிகழ்ச்சிகள், கர்நாடக கச்சேரிகள், கல்வி நிகழ்ச்சி என, வானொலியில் கேட்டவை ஏராளம். புகை பிடிப்பது, மது அருந்துவது தவறு என, அந்த காலத்திலேயே அறிவுறுத்திய ஊடகம் வானொலி.தென்கச்சி சுவாமிநாதன் போன்றவர்களின் உரை, நேயர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றவை. மக்களை சிந்திக்க வைப்பதோடு, கற்பனை வளத்தை அதிகரிக்க செய்ததில், அன்றைய வானொலியின் பங்கு அளப்பரியது. தேவையான தகவல்களை தருவது, தேச பக்தி, விழிப்புணர்வு என்பதே, வானொலியின் தலையாய கடமையாக இருந்தது.

தகவல் தொடர்பு துறையில் தாயாக விளங்கியது, வானொலி என்ற முதல் ஊடகம்தான்; ஆனால், "டிவி', கம்ப்யூட்டர், மொபைல்போன்கள், மக்களை நல்வழிப்படுத்துவதை காட்டிலும், தவறான பாதைக்கே, வழிநடத்துகிறது. வாழ்க்கை சீரழிவுகளை, காதில் கேட்க முடியாத, கண்ணில் பார்க்க கூடாத விஷயங்களை எல்லாம் காட்சிப்படுத்தி, மக்களை ரசிக்க செய்கிற ஒரு அவல நிலையை பார்க்க முடிகிறது.
வரும் 13ல், வானொலி தினம் கொண்டாடுகிறோம். வாரத்தில் ஓரிரு தினங்கள், ஆண்டுக்கு ஓரிரு மாதங்களாவது வானொலியை மட்டுமே கேட்பது, வீட்டில் வானொலியை ஒலிக்க செய்வது என்று, இந்நாளில் நாம் முடிவெடுக்க வேண்டும். பழுதுபட்ட நம் கண்களுக்கும், பாழடைந்த நம் செவிகளுக்கும் அருமருந்தாக, வானொலி அமையும் என்பதில் சந்தேகமில்லை. (நன்றி: தினமலர், 12 பிப். 2017)

No comments: