Saturday, April 07, 2018

சென்னைப் பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் ஹாம் வானொலி




 ஹாம் வானொலி வரலாற்றில் முதல் முறையாக ஒரு பல்கலைக்கழகம் ஹாம் வானொலியை பாடத்திட்டத்தில் கொண்டு வந்துள்ளது. சென்னைப் பல்கலைக்கழகத்தின் இதழியல் மற்றும் தொடர்பியல் துறை ‘ஹாம் வானொலி’ (Ham Radio) என்ற ஒரு விருப்பத் (Elective) தாளை கொண்டு வந்துள்ளது. சென்னைப் பல்கலைக்கழகத்தில் எந்த படிப்பினைப் படிக்கும் மாணவரும்,  இந்தத் தாளை எடுத்துப் படிக்கலாம். முதுகலைப் பாடத்திட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ள இந்தத் தாளை தெரிவு செய்வதன் ஊடாக அந்த மாணவர்கள், தனிப்பட்ட முறையில் ஹாம் தேர்வினை எழுதவும் வழிகாட்டப்படுவார்கள். ஆறு மாதங்கள் இந்த தாளானது வகுப்பில் எடுக்கப்படும். ஆர்வம் உள்ள மாணவர்கள் நேரடியாக ஹாம் தேர்வினையும் எழுத வழிவகை செய்யப்படும்.

அமெரிக்காவின் ARRL மற்றும் பிரிட்டனின் RSGB ஆகியவை இது போன்ற திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்து வருகிறது. அந்த வகையில் உலக அளவில் முதன் முறையாக இது போன்ற ஒரு படிப்பு முதுகலையில் அறிமுகம் செய்யப்படுவது இதுவே முதல் முறை. இது பற்றிய முழுமையான விபரங்களை www.arrl.org/amateur-radio-in-the-classroom எனும் முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

அமெரிக்காவில் உள்ள பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் ஹாம் ரேடியோ பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக Radio Waves எனும் இதழினை ஏ.ஆர்.ஆர்.எல். வெளியிட்டு வருகிறது. இது இலவசமாகவே http://www.arrl.org/radio-waves  எனும் இணைய முகவரியில் கிடைக்கிறது. இதன் மூலம், பள்ளிக் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் ஹாம் வானொலித் தொடர்பான விழிப்புணர்வை தூண்டுவதாக உள்ளது.


No comments: