நூற்றாண்டு காணும் இலங்கை வானொலி: சிறப்பு கட்டுரைத் தொடர் - 27
இந்தக் கட்டுரை சுந்தா அண்ணரின் நினைவுகளையும், இலங்கை வானொலி உலகின் பெருமையையும் காலத்திற்கும் நிலைபெறச் செய்யும் ஒரு சிறு முயற்சியாகும். ஒரு வானொலிக் கலைப் பயணத்தின் காலப்பதிவாக இந்த "மனஓசைப்" புத்தகம் அமைந்துள்ளது. இலங்கை வானொலி என்பது ஒரு காலகட்டத்தின் பண்பாட்டு அடையாளம். அந்த அடையாளத்தின் பின்னணியில் உழைத்த ஆளுமைகள் ஏராளம். அவர்களில் 'சுந்தா அண்ணா' என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் வி.ஏ.சுந்தரலிங்கம் அவர்கள் மிக முக்கியமானவர். அவரது வானொலி அனுபவங்கள் 'மனஓசை' என்ற நூலாக வடிவம் பெற்ற விதம் ஒரு சுவாரசியமான வரலாறு.
இது வெறும் புத்தகமல்ல; ஒரு இலங்கை வானொலிக் கலைஞனின் ஆன்மா, காலத்தின் சுவடுகளைத் தேடிச் செய்த பயணம் எனலாம். சென்னை அடையாறில் 1998-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த புத்தகத்தின் விதை நடப்பட்டது. சென்னை அடையாறில் இருந்த சுந்தா - பராசக்தி தம்பதிகளின் இல்லத்தில் தான் இந்தப் புத்தகம் எழுதப்பட்டது. ஒரு காலத்தில் காலிலே சக்கரம் கட்டிக்கொண்டு பம்பரமாகச் சுழன்று வேலை செய்தவர் சுந்தா அண்ணர். கலகலப்பான பேச்சும், ஓடி ஆடிப் பிறரை மகிழ்விக்கும் குணமும் கொண்ட அவர், அன்று சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்து அதை எழுதியதை எண்ணும் போது மனது கனத்தது என்கிறார் பேராசிரியர் மெளனகுரு.
அவரது சுறுசுறுப்பான பழைய நினைவுகள் நிழலாடினாலும், உடல் நலிவுற்றிருந்த அந்த நிலையிலும் அவரிடமிருந்த பழைய கலகலப்பும், நகைச்சுவை உணர்வும் அப்படியே இருந்தன. 'மனஓசை' என்ற நூல் உருவாவதற்கான கருவை விதைத்தது அவரது சென்னை வாழ்க்கை.
பேச்சு நூலாக மாறிய கதை சுவாரஷ்யமானது. சுந்தா அண்ணரின் வானொலி அனுபவங்கள் ஆவணப்படுத்தப்பட வேண்டும் என்பது அனைவரின் ஆவலாக இருந்தது. ஆனால், எழுத்து தனது துறையன்று என்றும், பேச்சே தனது பலம் என்றும் அவர் தயங்கினார். அவரது பலத்தையே ஆதாரமாகக் கொண்டு ஒரு நூலை உருவாக்கத் திட்டமிட்டு உருவாக்கிய நூல் இது எனலாம்.
அவரது நினைவுகள் அனைத்தும் ஒலிப்பதிவு செய்யப்பட்டன. அந்த ஒலிப்பதிவு நாடாக்களை இலங்கைக்குக் கொண்டு சென்று, அவரது மாணவரும் பேராசிரியர் மெளனகுருவின் சக விரிவுரையாளருமான க. இன்பமோகன் அவர்களின் உதவியுடன் எழுத்துருவாக்கம் செய்யப்பட்டது. பின்னர் பராசக்தி அக்கா அந்த எழுத்துப் படிகளைத் திருத்தினார்கள்.
ஒரு தேர்ந்த ஒலிபரப்பாளரின் பேச்சு, இங்கே எழுத்து வடிவம் பெற்று 'மனஓசை' என்ற நூலாக மலர்ந்தது. இலங்கை ஒலிபரப்புக் கலை வரலாற்றின் ஆவணமாக இந்தப் புத்தகம் திகழ்கிறது. ஈழத்து வானொலித் துறையைப் பொறுத்தவரை ஜோர்ஜ் சந்திரசேகரம், விக்கினேஸ்வரன் போன்றோர் தங்களின் அனுபவங்களைப் பதிவு செய்துள்ளனர்.
சோ. சிவபாதசுந்தரம், கே.எஸ். நடராஜா ஆகியோர் ஒலிபரப்புக் கலை பற்றி நுட்பமான நூல்களை எழுதியுள்ளனர். இந்த வரிசையில் சுந்தாவின் 'மனஓசை' ஒரு தனித்துவமான இடத்தைப் பிடிக்கிறது. இலங்கை வானொலியின் ஆரம்ப காலங்கள், தமிழ் மற்றும் சிங்கள ஒலிபரப்பாளர்கள் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் உதவியுடன் சகோதரத்துவத்தோடு பணியாற்றிய பொற்காலத்தை இந்நூல் விவரிக்கிறது.
அந்த இனிய காலங்கள் மீண்டும் வராதா என்ற ஏக்கத்தைச் சுந்தா அண்ணர் இந்நூலில் அடிக்கடி வெளிப்படுத்துகிறார். இது ஒரு கலைஞனின் தாகம் மட்டுமல்ல, ஒரு மனிதாபிமானியின் ஆழ்ந்த வேண்டுதலும் கூட.
அனைவருக்கும் அண்ணரான சுந்தா1970-களில் ஈழத்தில் ஏற்பட்ட கலை எழுச்சியில் இளைஞர்களோடு தோளோடு தோள் நின்று உழைத்தவர் சுந்தா அண்ணர். வயது வித்தியாசம் பாராது அவர் இளைஞர்களுடன் பழகியதால், அவர் அனைவருக்கும் 'சுந்தா அண்ணர்' ஆனார். அவரது இல்லம் ஒரு கலைக்கூடமாகவே திகழ்ந்தது. பராசக்தி அக்காவின் இன்முகமும், அவர் அன்போடு தரும் சுவையான கோப்பியும், ஆழமான உரையாடல்களும் அந்த வீட்டை இளைஞர்களின் புகலிடமாக மாற்றின என்கிறார் பேராசிரியர்.
1970-களின் நடுப்பகுதியில் அவரது வீட்டின் ஒரு பகுதியில் பேராசிரியர் மெளனகுரு குடியிருந்தபோது, ஒரு குடும்ப நண்பராக அவரது ஆளுமையை உள்ளிருந்து உணரும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்ததாகக் கூறுகிறார் இந்த நூலில். தானும் மகிழ்ந்து, பிறரையும் மகிழ்விக்கத் திடீர் திடீரெனச் சுவாரசியமான காரியங்களைச் செய்யும் அவரது குணம் வியப்பிற்குரியது.
ஒலிபரப்பாளரின் மொழிநடைக்கு இந்த நூல் ஒரு சான்றாகும். ஒரு சிறந்த வானொலித் தயாரிப்பாளர் நேயர்களுடன் தனிப்பட்ட முறையில் உரையாடுவது போலப் பேச வேண்டும் என்பது ஒலிபரப்புக் கலையின் அடிப்படைப் பாடம். கேட்ட மாத்திரத்தில் புரியக்கூடியதாகவும், ஆர்வத்தைத் தூண்டக்கூடியதாகவும் இருக்க வேண்டிய அந்த விசேட அம்சத்தை 'மனஓசை' நூலில் காணலாம்.
சுந்தா அண்ணர் தனது அனுபவங்களை, சம்பவங்களை மிகச் சுவைபட விவரிக்கும் விதம் 'கேட்டார் பிணிக்கும் தகைமையதாக' அமைந்துள்ளது. சுயவிமர்சனத்தோடும், நிதானமான முதிர்ச்சியோடும் தனது தவறுகளையும் வெற்றிகளையும் அவர் இதில் பதிவு செய்துள்ளார்.
பராசக்தி அக்கா, சுந்தாவின் உந்துசக்தி என்றால் மிகையில்லை. இந்த நூல் உருவானதில் பராசக்தி அக்காவின் பங்கு மிக முக்கியமானது. அவர் சுந்தா அண்ணரின் மனைவி மட்டுமல்ல; அவரது உந்துசக்தியாகவும், பரம ரசிகையாகவும், அதே சமயம் ஒரு நேர்மையான விமர்சகராகவும் இருந்தார். இந்த அழகான இணைப்பின் பலமே 'மனஓசை' புத்தகத்தின் வெற்றிக்குக் காரணம்.
ஈழத்து நாடகத் துறை, இலங்கை வானொலித் துறை மற்றும் கலைத்துறையில் ஈடுபாடு கொண்டவர்களுக்கு இந்நூல் ஒரு அரிய தகவல் பெட்டகமாகும். சாதாரண நேயர்களுக்கும் இது ஒரு சுவையான வாசிப்பு அனுபவத்தைத் தருகிறது. இலங்கையின் ஒலிபரப்புத் துறை வரலாற்றின் இன்னொரு பக்கத்தைத் தெரிந்துகொள்ள விரும்பும் எவரும் தவறவிடக்கூடாத ஒரு படைப்பு இது.
நூல் விவரம்:
ஆசிரியர்: வீ. சுந்தரலிங்கம் (சுந்தா)
பக்கங்கள்: 330
வெளியீடு: தி பார்க்கர், 293, அஹமத் காம்ளக்ஸ், இரண்டாவது தளம், இராயப்பேட்டை நெடுஞ்சாலை, சென்னை - 600014

