Saturday, January 19, 2013

சீன வானொலி தலைவர் கலைமகள் எழுதியுள்ள பயண நூல்


சீன வானொலியின் தமிழ் அறிவிப்பாளரான ஜியாவோ ஜியாங் (கலைமகள்) எழுதியுள்ள பயண நூலான சீனாவில் இன்ப உலா, சென்னை புத்தகக் காட்சியில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
சீன வானொலி உலகம் முழுவதும் பேசப்படும் சுமார் 70-க்கும் மேற்பட்ட மொழிகளில் நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்கி வருகிறது. அதில் கடந்த 50 ஆண்டுகளாக தமிழ் நிகழ்ச்சிகள் சிற்றலையில் ஒலிபரப்பாகி வருகின்றன. தமிழகத்தில் வானொலி கேட்கும் பழக்கம் மிகுந்திருந்த காலத்தில் தொடங்கி தற்போது வரையிலும் சுமார் 25 ஆயிரம் பேர் சீன வானொலியின் தமிழ் ஒலிபரப்பின் தொடர் ரசிகர்களாக இருந்து வருகின்றனர்.

உலகம் முழுவதும் பரவியுள்ள லட்சக்கணக்கான தமிழர்கள் சீனத் தமிழ் வானொலியின் தீவிர ரசிகர்களாக உள்ளனர். ஆண்டுக்கு சுமார் 5 லட்சம் கடிதங்கள் தமிழ் நேயர்களிடம் இருந்து சீனாவுக்கு செல்வதாகவும், தமிழகத்தில் மட்டும் சீன வானொலிக்கு 500 மன்றங்கள் இருப்பதாகவும் கூறுகிறார் சர்வதேச வானொலி இதழின் ஆசிரியர் தங்க.ஜெய்சக்திவேல்.
இத்தகைய பெருமைகளைக் கொண்ட சீன வானொலியின் தமிழ் ரசிகர்களுக்கு அறிவிப்பாளர் கலைமகள் மிகவும் பரிச்சயமானவர். சீன வானொலியின் சர்வதேச மொழிப் பிரிவுகளில் பணியாற்றுபவர்கள் அந்தந்த நாடு, மொழியைப் பேசும் மக்களைப் போன்றே புனைப் பெயர்களைச் சூடிக் கொள்கின்றனர். அவ்வாறு ஜியாவோ ஜியாங் என்ற இயற் பெயரைக் கொண்ட கலைமகளும் அங்கு பணியாற்றி வருகிறார்.
கடந்த 1999-ல் சீன வானொலியின் தமிழ் மொழிப் பிரிவில் சேர்ந்த இவர், தற்போது அந்த பிரிவின் தலைவராக உயர்ந்துள்ளார். சீன செய்தி ஊடகப் பல்கலைக்கழகத்தில் தமிழ் பட்டம் பெற்றுள்ள இவர், சிங்ஹூவா பல்கலைக்கழகத்தில் செய்தி, ஊடக நிர்வாகத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார். எழுத்துத் துறையில் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ள கலைமகள், சீனாவில் இன்ப உலா என்ற தலைப்பில் பயண நூல் எழுதியுள்ளார்.
சீனாவுக்கு சுற்றுலா செல்லும் தமிழர்கள் சீனப் பெருஞ்சுவரை மட்டுமே கண்டு ரசித்து வருகின்றனர். ஆனால் பெய்ஜிங்கிலும், ஷாங்காயிலும் காண வேண்டிய இடங்கள் பல உள்ளதாகவும், அவற்றைக் குறித்த வரலாற்றுத் தகவல்களையும் தனது நூலில் தெரிவித்துள்ளார்.
இந்த நூலை கெüதம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. 60 ரூபாய்க்கு விற்கப்படும் இந்த நூல், புத்தகக் காட்சியின் 283-வது அரங்கில் உள்ள கெüதம் பதிப்பக அரங்கில் கிடைக்கிறது. சீனாவைச் சேர்ந்த ஒருவர் தமிழில் நூல் எழுதியுள்ளது இதுவே முதல் முறை என்றும் சீனாவில் தமிழில் வெளியாகியுள்ள முதல் நூல் இது என்றும் கூறப்படுகிறது.
நன்றி: தினமணி 19 ஜனவரி 2012
Source: http://dinamani.com
Also read The Hindu: http://www.thehindu.com/news/international/chinas-first-tamil-author-looks-to-build-bridges/article4316604.ece?homepage=true

No comments: