Saturday, January 13, 2024

சென்னைப் பல்கலைகழகத்தில் கனடா EAST FM தலைவர் நடா இராஜ்குமார்

 













சென்னைப் பல்கலைக்கழக இதழியல், தொடர்பியல் துறையில் கடந்த 10 ஜனவரி 2024ல் ஒரு முக்கிய கருத்தரங்கினை நடத்தினோம்.

"சர்வதேச கண்ணோட்டத்தில் தமிழ் வானொலிகள்" என்ற தலைப்பினில் இந்த கருத்தரங்கம் நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராக கனடாவின் புகழ்பெற்ற வானொலியான EAST FMன் தலைவர் திரு.நடா இராஜ்குமார் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்கள். மாணவர்களுக்கு பல்வேறு நிகழ்ச்சி தயாரிப்பு மற்றும்  தொழில்நுட்பம் சார்ந்த தகவல்களை வழங்கினார்கள்.

குறிப்பாக கனடாவில் பணியாற்ற தேவையான தகுதி, என்ன மாதிரியான வேலை வாய்ப்பு உள்ளது, அதற்கு எப்படி தயாராக இருக்க வேண்டும் போன்றவற்றை சுவைப் பட தெரிவித்தார்கள்.

நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக, குரல் வளம் மிக்க மாணவர்களுக்கு தனது வானொலியில் வாய்ப்பினைத் தருவதாக வாக்குறுதி அளித்தார். இது மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை அளித்தது.

இந்த நிகழ்வை சாத்தியமாக்கியவர் Siva Parameswaran . இந்த சமயத்தில் சென்னைப் பல்கலைக்கழக மாணவர்கள் சார்பில் நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன்.

எம்மோடு இணைந்து ஆய்வு மாணவர்கள் தீப்தி சுரேஷ் மற்றும் மெளலி பிரியா ஆகியோர் ஒருங்கிணைத்தனர்!


Friday, January 12, 2024

அசாத் ஹிந்த் வானொலியில் தமிழ்

 



BOSE: An Untold Story of an Inconvenient Nationalist எனும் புத்தகத்தினை இன்று புத்தகக் காட்சியில் பார்த்தவுடன் வாரி அனைத்துக் கொள்ளத் தோன்றியது. என்ன ஒரு செய்நேர்த்தி, வடிவமைப்பு. அழகான கட்டுமானம்.

சுபாஷ் சந்திர போஸ் புத்தகங்களில் எதைப் பார்த்தாலும், உடனே அதில்  Azad Hind Radio பற்றி என்ன எழுதியுள்ளார்கள் என்று ஆர்வத்துடன் தேட தொடங்கிவிடுவேன். அதே தான் இன்றும் நடந்தது, உடன் வந்த அன்பு மாணவர் விஷ்வா ஒவ்வொரு பக்கத்தினையும் கண்கள் விரிய பார்த்த என்னை ஆச்சர்யமாகப் பார்த்தார்.

F18 Penguin அரங்கில் தான் இந்தப் புத்தகம் கிடைக்கிறது. 740 பக்கங்கள் கொண்ட இந்த புத்தகத்தின் விலை ₹ 999. (10% கழிவு தனி) இந்த நூல் எனக்குப் பிடித்தமைக்குக் காரணம், அவ்வளவு மேற்கோள்கள் மற்றும் துணை தரவுகளை ஆசிரியர் கொடுத்துள்ளது தான். குறிப்பாக துணை நூற்பட்டியல் மலைக்க வைக்கிறது.

"நான் சுபாஷ் சந்திர போஸ் அசாத் ஹிந்த் ரேடியோ ஊடாகப் பேசுகிறேன், நான் இங்கு இன்னும் உயிரோடு தான் இருக்கிறேன்" என்று தனது கம்பீரக் குரலில் "மக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம்" என்று பேசியதை, வரிகள் மாறாமல் அப்படியே இந்த புத்தகத்தில் பதிவு செய்துள்ளார் சந்திரஷுர் கோஸ்.

பத்துக்கும் மேற்பட்ட பக்கங்களில் அசாத் ஹிந்த் வானொலித் தொடர்பானத் தகவல்களைத் திரட்டித் தந்துள்ளார். இதில் சுவாரஷ்யமானத் தகவல் என்னவெனில், இந்த வானொலி தமிழ் மொழியிலும் சிற்றலையில் (Shortwave) ஒலிபரப்பியது என்பது அனைவருக்கும் ஆச்சர்யம் ஊட்டும் செய்தி.



Thursday, January 11, 2024

இந்து இயர் புக்-2024ல் வானொலிக் கட்டுரை

 



நேரடியாக விஷயத்திற்கு வருகிறேன். இந்த வருட இந்து தமிழ் திசை வெளியிட்டுள்ள "இயர் புக் 2024"-ல் வானொலித் தொடர்பான ஒரு கட்டுரையை எழுதியுள்ளேன்.

"புதியத் தொழில்நுட்பத்துடன் இன்றைய வானொலி ஒலிபரப்பு" எனும் தலைப்பிலான நீண்ட கட்டுரை இந்த வருட இயர் புக்கில் வெளிவந்துள்ளது. கட்டுரையை வெளியிட ஊக்குவித்த திரு.ஆதி வள்ளியப்பன் அவர்களுக்கும், தயாரிப்பு குழுவினருக்கும் நன்றி.

தரமானத் தாளில், அதிகப் பக்கங்களுடன், நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு, முக்கியக் கட்டுரைகளைத் தாங்கி வெளிவந்துள்ள இந்த இயர் புக், ஒவ்வொரு ஊடக படிப்பினைப் படித்துவரும் மாணவர்களின் கையிலும் இருக்க வேண்டிய ஒரு முக்கிய புத்தகமாகும்.

800 பக்கங்கள் கொண்ட இந்த புத்தகத்தின் விலை ₹ 275. புத்தகக் காட்சியில் 10% கழிவில் கிடைக்கிறது.

கொசுறுத் தகவல்:

ஒவ்வொரு வருடமும் இயர் புக்குகளில் புதுமையாக ஏதேனும் இணைத்துள்ளார்களா? என்று தொடர்ந்து பார்த்து வருவேன். அதுவும் குறிப்பாக ஊடகங்களுக்கு என்று ஏதேனும் இடம் கொடுக்கப்பட்டுள்ளதா என்று.

ஒரு காலத்தில் மனோரமா இயர் புக்குகளில் உலக நாடுகளின் தூதரகங்கள் இந்தியாவில் எந்த இடங்களில் அமைந்துள்ளது போன்ற விபரங்களை முகவரிகளுடன் கொடுப்பார்கள். இதற்கும் ஊடகத்திற்கும் என்னத் தொடர்பு எனக் கேட்பவர்கள், கொஞ்சம் பொறுமை காக்கவும்.

ஆங்கில இயர் புக்குகளில் இன்னும் ஒரு படி மேலேச் சென்று வெளிநாடுகளில் இந்தியாவின் தூதரகங்கள் அமைந்துள்ள முகவரிகளையும், மின் அஞ்சல் முகவரியுடன் கொடுப்பார்கள். ஆனால், சமீப காலமாக எந்த இயர் புக்குகளிலும் இந்த தூதரக முகவரிகள் இடம்பெறுவதில்லை.

இந்த முகவரிகளைக் கொண்டுதான் ஒரு காலத்தில் அனைத்து நாடுகளின் வானொலிகளையும் தொடர்பு கொண்டோம். பெரும்பாலான தூதரகங்கள் புது தில்லியில் உள்ள சாணக்கியபுரியில் தான் அமைந்துள்ளன, என்பதே இயர் புக் மூலமாகத்தான் தெரிய வந்தது. பிற்காலத்தில் அந்த தூதரகங்களுக்கு நேரடியாகச் சென்றது வேறு கதை.

உலக வானொலிகளை எப்படித் தொடர்பு கொண்டோம் என்பதே இங்கு சுவாரஷ்யம் தரக்கூடியது. உதாரணமாக நெதர்லாந்து நாட்டின் Radio Nederland-ஐ தொடர்பு கொள்ள, முதலில் அந்த நாட்டின் தூதரக முகவரியை கண்டுபிடிப்போம். அதன் பின் அந்த முகவரிக்கு முன்

English Section,
Radio Nederland,
என்று எழுதி, அதன் பின்
C/o Embassy of Nederland,
6/50 F, Shantipath,
Chanakyapuri,
New Delhi - 110021
என்று அஞ்சல் அட்டையிலேயே எழுதி அனுப்புவோம். ஒரு மாதத்தில் அந்த வானொலிக்கு தூதரகம் அனுப்பிவிடும். இது போன்றே அனைத்து நாடுகளின் வானொலிகளையும் 25 பைசா அஞ்சலட்டையில் தொடர்பு கொண்ட அனுபவத்தை என்னவென்று சொல்வது!

இணையம் வந்துவிட்டபடியால், அனைத்து தூதரக முகவரிகளையும், இணையம் ஊடாக பெற்றுக் கொள்ள முடிவதால் கூட இன்றைய இயர் புக்குகளில் இது தவிர்க்கப்பட்டு இருக்கலாம்.  ஆனாலும், இது இயர் புக் அல்லவா, அந்த முகவரிகள் இருந்தால் இன்னும் சிறப்பாகத்தான் இருக்கும்.

#

Tuesday, November 28, 2023

ஹாம் மீட் 1985


 வானொலி என்ற இதழை அகில இந்திய வானொலி வெளியிட்டு வந்தது. 1985ல் வெளிவந்த இதழ் ஹாம் வானொலி சிறப்பிதழாக மலர்ந்தது. அதில் வெளியான ஒரு கவிதை ஹாம் வானொலியைப் பற்றி புகழ்கிறது. 

Saturday, November 11, 2023

ஆஸ்திரேலிய வானொலி: நூற்றாண்டு நினைவு அஞ்சல் தலை


 $1.20க்கு ஆஸ்திரேலிய அஞ்சல் துறையானது பொது ஒலிபரப்பு வானொலி சேவையின் நூற்றாண்டுக்காக புதிய அஞ்சல் தலையை  வெளியிட்டுள்ளது.

இந்த ஸ்டாம்ப்பில் ஒரு பெண் தனது வரவேற்பு அறையில் உள்ள வானொலிப் பெட்டியில் காதுகளை வைத்து ரேடியோவை  ட்யூன்  செய்து Music Lovers Hour எனும் நிகழ்ச்சியை கேட்டுக்  கொண்டிருப்பதைக் காட்டுகிறது. 

ரேடியோ 2BLஆனது ஆஸ்திரேலாவில், 21 நவம்பர் 1923 அன்று அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்பட்டது. இதுவே பொது சேவை ஒலிபரப்பு செய்யும் ஆஸ்திரேலியாவின்  முதல் வானொலி  நிலையமாகும். 

ஸ்டாம்பில்  இடம்பெற்றுள்ளது AWA ரேடியோவாகும், இது 1949இல் ஆஸ்திரேலியாவில் புகழ்பெற்ற வானொலிப் பெட்டியாகக் கருதப்படுகிறது. இந்த அஞ்சல் தலையை வடிவமைத்தவர் Harry Slaghekke. 1940ல் Max Dupain அவர்கள் AWA Radiolaவின் விளம்பரத்திற்காக  எடுக்கப்பட்ட புகைப்படங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த அஞ்சல் தலையை வடிவமைத்துள்ளார்.

"Music Lovers Hour” என்ற நிகழ்ச்சியானது 2BL எனும் பெயர் கொண்ட வானொலியில் அன்றைய காலகட்டத்தில்  ஒலிபரப்பானது. இன்று அந்த வானொலியின் பெயர் ABC Radio Sydney என  மாற்றப்பட்டுள்ளது. 

தொடக்க காலத்தில்  2SB என்றும், பிறகு 2BL என்றும் இந்த வானொலி பெயர் மாற்றம் கண்டது. சமீபத்தில் வெளியான இந்த அஞ்சல் தலையை நேரடியாக ஆஸ்திரேலிய அஞ்சல் துறைக்கு எழுதிப் பெற்றேன்.

அஞ்சல் தலையுடன், முதல் நாள் கடித உறை (First Day Cover), அஞ்சலட்டை (Maxi Card), Folder ஆகியவையும் அடங்கும். இதில் குறிப்பிடத்தக்க அம்சம், அதன் Cancellation முத்திரை. அழகான ஒலி வாங்கியை மையாமகக் கொண்டு அது வடிவமைக்கப்பட்டுள்ளது. 

இது வானொலி ஆர்வலர்கள், சேகரிப்பாளர்கள், ஆய்வாளர் மத்தியில் இருக்க வேண்டிய முக்கியமான அஞ்சல் தலையாகும்.சொல்லப்போனால், இந்தியாவிலும் வானொலித் தொடங்கப்பட்டு ஜூன் 2023டன் நூறு ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது.

மும்பையில் Radio Club of Bombay என்றப் பெயரில் ஜூன் 1923 அன்று வானொலி ஒலிபரப்பு தொடங்கப்பட்டது. மத்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகமும், இந்திய அஞ்சல் துறையும் இணைந்து "இந்தியாவில் வானொலியின் 100 ஆண்டுகள்" எனும் கருப்பொருள் கொண்ட அஞ்சல் தலையை விரைவில் வெளியிட வேண்டும்.


 


 #

Saturday, November 04, 2023

அகில இந்திய வானொலிக்காக ஒரு ஆய்வுப் புத்தகம்


பிபிசி, சீன வானொலி, வேரித்தாஸ் வானொலி மற்றும் இலங்கை வானொலிகளைத் தொடர்ந்து தற்பொழுது அகில இந்திய வானொலிக்காக மற்றும் ஒரு ஆய்வுப் புத்தகம்.

நேயர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் ஆய்வாளர்களிடம் இருந்து கட்டுரைகளை வரவேற்கிறோம். கட்டுரையை 30-11-2023 முன் அனுப்பி வைக்கலாம்.

தெரிவு செய்யப்படும் கட்டுரைகள் ISBN குறியீட்டுடன் வெளியிடப்படும்.


Research Book on All India Radio:
We are now publishing a book on All India Radio, following our success with BBC, China Radio International, Radio Veritas Asia, and Sri Lankan Broadcasting Corporation. We invite articles from radio listeners, journalists, and researchers. Submit articles by November 30, 2023, for publication in a book with an ISBN code.



Friday, July 07, 2023

ஆஸ்திரேயாவின் அடிலெய்டில் இருந்து தமிழில் ஒலிப்பரப்பும் 5EBI 103.1 FM.




 தெற்கு ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய மற்றும் ஒரே முழுநேர பன்முக கலாச்சார சமூக வானொலி 5EBI  நிலையமாகும். 200க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களின் உதவியுடனும்,  உறுப்பினர் இனக்குழுக்கள், மாநில மற்றும் மத்திய அரசு மற்றும் பல உள்ளூர் ஆதரவாளர்களின் ஆதரவுடனும் ஒவ்வொரு வாரமும் 40க்கும் மேற்பட்ட மொழிகளில் ஒலிபரப்பை செய்து வருகிறது 5EBI. இதில் தமிழ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர்களில் ஒருவராக இணைந்துள்ளார் RJ நாகா.

ஆஸ்திரேயாவின்  அடிலெய்டில் இருந்து ஒலிப்பரப்பாகிறது  5EBI  103.1 FM.

மாதத்தில் இரன்டு வாரம்.  இரண்டு மற்றும் நான்காவது வாரங்களில் நாகா தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ஒலிப்பரப்பாக இருக்கிறது. 

நாகாவுடன் சேர்ந்து  ஸ்ரீராமா, ஹேமா இருவரும் வாரம் ஒரு நிகழ்ச்சி என தங்கள் பங்களிப்பையும் கொடுக்க இருக்கின்றனர். 

 இணையம் வழியாகவும் அல்லது ஆஸ்திரேலியாவில் இருந்தால் நேரடியாகவோ நீங்கள் கேட்கலாம். 


இணைப்பு சுட்டி :  https://5ebi.com.au/