Thursday, May 28, 2009

சூரியப்புள்ளியும் சிற்றலை வானொலியும்: பகுதி - 2

கதிர்வீச்சு முதலில் வெடிப்புடன் துவங்கி, 400,000 ஆண்டுகள் கழித்து பிரபஞ்சம் குளிர்ந்து இருளடையத் துவங்கியது. உற்பத்தியான ஹைட்ரஜன் அணுக்கள் எல்லா கதிர்களையும் உறிஞ்சிக் கொண்டன. பரவெளி எங்கும் சமமாய், அணுவிற்கும் அடிப்படை நிலையில் உள்ள ஒரே பொருள் பரவியிருந்தது. அதற்கு சுயஒளி இல்லாததால் எங்கும் இருள் சூழ்ந்து இருந்தது. மெல்ல மெல்ல அப்பொருள் இணைந்து முதல் அணுவாகிய ஹைட்ரஜனுடன் தோன்றியது. அந்தத் தோற்றத்தின் போது ஆகாயமெங்கும் நுண்அலையாக மின்காந்த ஆற்றல் வெளிப்பட்டது. எனவே, ஆரம்ப காலத்தில் பரவெளியில் ஆதி அணுவான ஹைட்ரஜனும், கூடவே வெளிவந்த மின்காந்த அலையுமே பரவி இருந்தது. வெளிச்சமும் ஒரு துளிகூட இல்லை. இப்படியே 100 மில்லியன் ஆண்டுகள் ஆகாயம் ஒரு நட்சத்திரமும் இன்றி ஒரே சமமாக கிடந்தது.

பிறகு, ஆங்காங்கே ஆற்றல் நிலைகளில் ஏற்பட்ட தடுமாற்றங்களால், சீராகப் பரவியிருந்த ஆகாயத்தில் (திரிந்து போன பால் கெட்டித் தட்டுவது போல்) ஆதி தாரகைகளின் விதைகள் உருவாயின. அந்த விதைகளை நோக்கி பொருட்கள் குவியக் குவிய அவை பெரிதாகி விண்மீன்களாயின. அவ்விண்மீன்களின் நடு இதயப்பகுதியில் ஏற்பட்ட நெரிசலால் பொருள்கள் இணைந்து அணுக்கரு இணைப்பாற்றல் துவங்கி அதன் பயனாக ஆகாயத்தில் காமா கதிர்வீச்சுடன் முதல் ஒளி தோன்றியது. எங்கும் பிரகாசமாக தாரகைகள் ஜொலிக்க ஆரம்பித்தன. (அறிவியலில் அணுக்கரு இணைப்பாற்றல் பற்றி அறிய ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் சமன்பாடு, மேக்ஸ் பிளாங்கின் குவான்டம் கொள்கை உதவுகின்றன)
நம் பூமியைப்போல் பல லட்சம் மடங்கு பெரிதாக உள்ள சூரியனையே நாம் கண்டு வியக்கிறோம். ஆதி தாரகைகள் நம் சூரியனைப் போல் இன்னும் 100 ஆயிரம் முதல் பல மில்லியன் (10 லட்சம்) மடங்கு பெரிதானவை. அவற்றின் குறுக்களவு 10 முதல் 100 ஒளி ஆண்டுகள் விரிந்திருந்தது. (1 ஒளி ஆண்டு என்பது ஒளி அதன் வேகத்தில் ஒரு ஆண்டில் கடக்கும் தூரம்)
தொடரும்...
- கிழக்கு தாம்பரம் வி. பாலசுப்ரமணி, அலைபேசி: 99520 67358

No comments: