Sunday, June 14, 2009

சூரியனை ஆராயும் செயற்கைகோள்கள்

விண்வெளியில் உள்ள கோள்கள் அனைத்தும் சூரியனை மையமாக வைத்தே சுழல்கின்றன. ஒவ்வொரு கோள்களும் தங்களுக்கு என வகுத்துள்ள வட்ட மற்றும் நீள் வட்டப்பாதையில் சுற்றி வருகின்றன. சூரியனை அடுத்து மெர்க்குரி, வீனஸ், பூமி, மார்ஸ் (செவ்வாய்), ஜுபிடர், சனி, யுரேனஸ், நெப்டிïன் என்ற வரிசையில் கோள்கள் அமைந்துள்ளன. இது தவிர ஏராளமான துணைக்கோள்களும், நட்சத்திரங்களும், விண்கற்களும் விண் வெளியில் சுற்றி வருகின்றன. இத்தனை கோள்கள், நட்சத்திரங்கள் இருந்தாலும் பூமியில் மட்டுமே மனிதர்கள் மற்றும் உயிரினங்கள் வசிக்கும் அமைப்பு உள்ளது. பூமி போல வேறு கோள்களில் உயிரினங்கள் இருக்கின்றதா? அல்லது இதற்கு முன்பு இருந்திருக்கிறதா? என்ற ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

விண்வெளி ஆராய்ச்சியில் தீவிர ஆர்வம் கொண்ட மனிதன் பல நூறு ஆண்டுகளாகவே அது குறித்து ஆய்வுகள் நடத்தி பல்வேறு கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி இருக்கின்றான். பூமிக்கு அருகில் உள்ள கோளான நிலவுக்குச் சென்று கால்பதித்தான் மனிதன். தற்போது அங்கு ஆய்வு நிலையத்தை அமைக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றது. நிலவுக்குச்சென்றது போல சிவப்பு கிரகம் என்று அழைக்கப்படும் செவ்வாய்க்கும் விஞ்ஞானிகள் ஆய்வுக்கலங்களை அனுப்பி உள்ளனர். இந்த ஆய்வுக்கலங்கள் செவ்வாயக் கிரகத்தில் இறங்கி பல்வேறு ஆய்வுகளை நடத்தி வருகின்றது. இதுபோல மற்ற கிரகங்களை ஆராயவும் மனிதன் செயற்கை கோள்களை அனுப்பி இருக்கின்றான்.

பல்வேறு அற்புதங்கள் நிறைந்த விண்வெளியில் மிகப்பெரிய அதிசயமாக திகழ்கிறது சூரியன். ஹைட்ரஜன், ஹீலியம் வாயுக்கள் நிரம்பிய சூரியன் நெருப்புக்கோளமாகவே உள்ளது. இதில் காணப்படும் கதிர்வீச்சும், காந்தப்புலனும் ஆபத்து நிறைந்தவை. எனவே எந்த ஒரு பொருளும், உயிரினமும் இங்கு நெருங்க முடியாது. எனவே வெகு தூரத்தில் இருந்தே டெலஸ்கோப் மூலம் சூரியனை ஆராய்ந்து வந்தனர். இப்போது சூரியனுக்கு கொஞ்ச தூரத்தில் இருந்து ஆய்வு நடத்த 2 செயற்கை கோள்களை அனுப்ப உள்ளனர். ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிலையமும் , நாசாவும் இணைந்து இந்த செயற்கை கோள்களை அனுப்புகிறது.

ஐரோப்பிய விண்வெளி ஆய்வுநிலையம் அனுப்பும் இந்த செயற்கைகோளுக்கு `சோலார் ஆர்பிட்டர்' என்று பெயர் சூட்டி இருக்கிறார்கள். வருகிற 2015 ம் ஆண்டு இந்த செயற்கை கோள் சூரியனை நோக்கி தனது பயணத்தை தொடங்கும். சிறிய கார் அளவு இருக்கும் இந்த செயற்கை கோள் சூரியனின் வெப்பத்தினால் பாதிக்காத அளவுக்கு பாதுகாப்பு கவசம் கொண்டதாக தயாரிக்கப்படுகிறது. இது தவிர சூரியனில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சு மற்றும் காந்தப்புல வீச்சினால் பாதிக்கப்படாத அளவுக்கு பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்ததாக இந்த செயற்கை கோள் இருக்கும்.

சோலார் ஆர்பிட்டர் சூரியனை சுற்றி வந்து படம் பிடித்து அதை ஐரோப்பிய விண்வெளி ஆய்வுநிலையத்துக்கு அனுப்பி வைக்கும். மேலும் சூரியனின் துருவப்பகுதியையும் இந்த செயற்கை கோள் ஆய்வு செய்யும். சூரியனின் தரைப்பகுதியைவிட வெளிப்புற பகுதி ஏன் அதிக உஷ்ணமாக இருக்கிறது? சூரியனில் ஏன் நெருப்புக்கோள புயல், சூரியப்புள்ளி மற்றும் நெருப்பு பெருவெடிப்புகள் போன்றவை ஏற்படுகின்றன என்பது குறித்தும் ஆய்வுகள் நடைபெறும்.

அமெரிக்காவின் நாசா விண்வெளி நிலையம் அனுப்பும் செயற்கைகோளுக்கு `சோலார் புரோப் பிளஸ்' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த ஆய்வுக்கலம் சூரியனின் மையப்பகுதி குறித்து ஆய்வுகளை நடத்தும். இந்த ஆய்வுகளின் முடிவில் சூரியன் குறித்த பல அதிசய தகவல்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
(Source: http://www.dailythanthi.com)

No comments: