நூற்றாண்டு காணும் இலங்கை வானொலி: சிறப்பு கட்டுரைத் தொடர் - 13
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் (SLBC) முஸ்லிம் சேவை, இலங்கையில் வாழும் இஸ்லாமிய சமூகத்தின் ஆன்மீக, சமூக மற்றும் பண்பாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் ஒரு முக்கிய ஊடகப் பிரிவாகச் செயல்படுகிறது. வாரம் முழுக்க ஒலிபரப்பப்பட்டாலும் ஒரு நாள் மட்டும் ஒலிபரப்பாகும் நிகழ்ச்சி நிரலை இங்கு பதிவு செய்கிறோம். இது 2000 ஜனவரியில் ஒலிபரப்பட்ட நிகழ்ச்சிகளாகும், குர்ஆனியக் கல்வியில் தொடங்கி, சமூக விவாதங்கள், கீதங்கள் மற்றும் வரலாற்றுக் குறிப்புகள் வரை பலதரப்பட்ட உள்ளடக்கங்களை உள்ளடக்கி, செவிமடுப்பவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த நிகழ்ச்சிகள். முஸ்லிம் சேவையின் ஒவ்வொரு நிகழ்ச்சியும், இஸ்லாமிய விழுமியங்களையும், சமூக நல்லிணக்கத்தையும் பேணிக்காக்கும் நோக்குடன் ஒலிபரப்பப்படுகின்றன.
திங்கட்கிழமை நிகழ்ச்சிகள், காலை 5:45 மணிக்கு ஒலிபரப்பாகத் தொடங்கியது “இஸ்லாமிய நற்சிந்தனை”யுடன் ஆரம்பமாகி, கேட்பவர்களுக்கு ஒரு நேர்மறையான ஆன்மீகத் தொடக்கத்தை வழங்குகியது எனலாம். இந்தச் சிந்தனை, அன்றாட வாழ்வில் இஸ்லாமியக் கோட்பாடுகளைப் பின்பற்றுவதற்கான தூண்டுதலை முஸ்லிம் நேயர்களுக்கு அளித்தது. அதன் பிறகு, காலை 9:00 மணிக்கு “அல் குர்ஆன் முறத்தல்” நிகழ்ச்சி ஒலிபரப்பாகியது. குர்ஆனைப் பிழையின்றி ஓதுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்கிய இந்த நிகழ்ச்சி, இஸ்லாமிய நேயர்களை குர்ஆனுடன் இணைக்க உதவியது. தொடர்ந்து 9:05 மணிக்கு “மாதர் மஜ்லிஸ் – நேரடித் தொலைபேசி நிகழ்ச்சி” ஒலிபரப்பாகியது. இது இஸ்லாமியப் பெண்மணிகளின் வாழ்வியல் சிக்கல்கள், சமூகப் பங்களிப்புகள் மற்றும் மார்க்க ரீதியான சந்தேகங்களுக்கான விவாதக் களமாகச் செயல்பட்டது. பெண்களின் குரலுக்கு முக்கியத்துவம் அளிக்கும் இம்முயற்சி, முஸ்லிம் சேவையின் சமூகப் பொறுப்புணர்வை வெளிப்படுத்துகிறது.
காலை 10:00 மணிக்கு ஒளிபரப்பாகிய “இன்றைய மதரஸாக்கள்” நிகழ்ச்சி, இலங்கையில் இயங்கி வரும் இஸ்லாமியக் கல்வி நிறுவனங்களின் பங்களிப்பு, கற்பித்தல் முறைகள் மற்றும் அதன் முக்கியத்துவத்தை விவாதித்தது. மதக் கல்வி வளர்ச்சியில் இந்த நிகழ்ச்சியின் பங்கு குறிப்பிடத்தக்கது. 10:25 மணிக்கு ஒலிபரப்பாகிய “நேயர் தெரிவில் இஸ்லாமிய கீதங்கள்” நிகழ்ச்சி, நேயர்களின் விருப்பத்திற்கேற்பத் தேர்ந்தெடுக்கப்பட்ட இஸ்லாமியப் பாடல்களை ஒலிபரப்பி, பொழுதுபோக்கு அம்சத்துடன் கூடிய ஆன்மீக இன்பத்தை வழங்கியது. இந்தப் பாடல்கள், இஸ்லாமிய கலாசார விழுமியங்களை இசையின் ஊடாகப் பரப்பின. தொடர்ந்து, 10:55 மணிக்கு ஒலிபரப்பாகிய “கஸீதா” நிகழ்ச்சி, பாரம்பரிய இஸ்லாமியப் புகழ்ப் பாடல்கள் மற்றும் பக்திப் பாடல்களின் முக்கியத்துவத்தையும், அவற்றின் இலக்கியச் செழுமையையும் எடுத்துரைத்தது. இந்த இடைப்பட்ட கால நிகழ்ச்சிகள், கல்வி மற்றும் கலை ஆகிய இரண்டிற்கும் முக்கியத்துவம் அளித்து, நேயர்களைக் கட்டிப்போடும் விதமாக வடிவமைக்கப்பட்டிருந்தன.
இரவு 8:00 மணிக்கு முஸ்லிம் சேவையின் மற்றொரு முக்கியமான பகுதி தொடங்குகியது. 8:00 மணிக்கு “அல் குர்ஆன் பொழிப்புரை” ஒலிபரப்பாகி, குர்ஆனின் வசனங்களுக்கு ஆழமான விளக்கங்களை அளித்தது. இது, சாதாரண மக்கள்கூட குர்ஆனின் செய்தியை எளிதில் புரிந்துகொள்ள உதவியது. தொடர்ந்து, 8:05 மணிக்கு, மெளல்வி எம்.ஐ.அப்துல் ரஸ்ஸாக் அவர்கள் உரையாற்றிய “இஸ்லாமிய விழுமியங்கள்” நிகழ்ச்சி இடம்பெற்றது. இந்தப் பகுதி, இஸ்லாமிய வாழ்வியலில் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்க நெறிகள், பண்புகள், மற்றும் மனிதநேய விழுமியங்களை வலியுறுத்தி, சமூகத்தின் அறநெறி மேம்பாட்டுக்குத் துணைபுரிந்தது. ஒரு ஆளுமையின் வாயிலாக இந்த விழுமியங்களைப் பேசுவது, அவற்றின் தாக்கத்தை நேயர்கள் மத்தியில் அதிகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
இரவு 8:15 மணிக்கு ஒலிபரப்பாகிய “முஸ்லிம் சமூக கலாசாரச் செய்திகள்” மற்றும் “முஸ்லிம் உலகம் – வாரமஞ்சரி” தொகுப்பு (ஹில்மி முஹம்மத் அவர்களால் தொகுக்கப்பட்டு ஒலிபரப்பாகியது) ஆகியவை இலங்கை முஸ்லிம் சமூகத்திலும் உலக அரங்கிலும் நடைபெறும் முக்கிய அரசியல், சமூக மற்றும் கலாசார நிகழ்வுகளைப் பற்றிய விரிவான தகவல்களை வழங்குகின. இது, இஸ்லாமியச் சமூகத்தை உள்ளூர் மற்றும் உலகளாவிய சூழல்களுடன் இணைக்க உதவியது. 8:20 மணிக்கு “இஸ்லாமிய கீதம் (விசேடம்)” மற்றும் “அஹதியா தொகுப்புரை” ஆகியவை ஒலிபரப்பாகின. அஹதியா என்பது சிறுவர்களுக்கான இஸ்லாமியப் பாடசாலை இயக்கத்தைக் குறிக்கும். இந்தத் தொகுப்புரை, இளைஞர்கள் மற்றும் சிறுவர்களுக்கான மார்க்கக் கல்வி, வரலாறு, மற்றும் இஸ்லாமிய விழுமியங்களை இலகுவான முறையில் கற்றுக்கொடுக்கப்பட்டது. இது, அடுத்த தலைமுறைக்கு இஸ்லாமியப் பண்பாட்டை எடுத்துச் செல்லும் மகத்தான பணியை முஸ்லிம் சேவை மேற்கொள்வதைக் காட்டுகிறது.
இரவு 8:30 மணிக்கு ஒலிபரப்பாகிய “வரலாற்றில் ஓர் ஏடும் குறிப்பும்” மற்றும் “ஸல்வாதீதும்” ஆகிய நிகழ்ச்சிகள், இஸ்லாமிய வரலாறு, அதன் முக்கிய ஆளுமைகள் மற்றும் நிகழ்வுகளைப் பற்றி விவாதித்தன. வரலாற்றில் இருந்து பாடங்களைக் கற்றுக்கொள்வதற்கும், இஸ்லாத்தின் பங்களிப்புகளைப் புரிந்துகொள்வதற்கும் இவை உதவின. இதைத் தொடர்ந்து, இரவு 8:55 மணிக்கு பரீன் அப்துல் காதர் அவர்களால் நடத்தப்பட்ட “சொற்சமர்” நிகழ்ச்சி, ஒரு விவாத மேடையாகச் செயல்பட்டு, சமூகத்தில் நிலவும் சமகாலப் பிரச்சினைகள் அல்லது மார்க்கக் கேள்விகளுக்குப் பதிலளித்தது. நிறைவாக, இரவு 10:00 மற்றும் 10:20 மணிக்கு “சங்ஸகுர்திக சங்கராவ” (தொகுப்பு: மிஸ்ருல் ஹனீமா இஷ்ஹாக்) போன்ற நிகழ்ச்சிகளுடன் திங்கட்கிழமை ஒலிபரப்பு நிறைவடைந்தது. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் முஸ்லிம் சேவையானது, வெறும் ஆன்மீகத்தைப் பரப்புவது மட்டுமல்லாமல், கல்வி, கலை, சமூக விழிப்புணர்வு மற்றும் வரலாற்றுக் கல்வி ஆகியவற்றின் மூலம் இஸ்லாமிய சமூகத்திற்கு ஒரு முழுமையான தகவல் தளத்தை வழங்குகியது எனலாம்.

No comments:
Post a Comment