நூற்றாண்டு காணும் இலங்கை வானொலி: சிறப்பு கட்டுரைத் தொடர் - 11
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் வர்த்தக சேவை, தமிழ்ச் சமூகத்தின் கலை, இசை மற்றும் பொழுதுபோக்குத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் ஒரு முன்னோடிப் பங்கைக் கொண்டு இருந்தது. அதன் நிகழ்ச்சிகள், காலைப் பொழுதிலிருந்து இரவு வரை, நேயர்களின் அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே திகழ்ந்தன. அதுவும் தமிழக நேயர்களின் மனதில் நீங்கா இடம் பெற்றன. கீழே கொடுக்கப்பட்டுள்ளது ஒரு உதாரணம் மட்டுமே. 1952 இல் இருந்து பல முக்கிய நிகழ்ச்சிகள் வர்த்தக சேவையில் ஒலிபரப்பாகியுள்ளன. நமக்கு கிடைத்த தரவுகளின் படி 2000த்தில் ஒரு திங்கட்கிழமை ஒலிபரப்பான நிகழ்ச்சிகள் இங்கு பதிவு செய்யப்படுகிறது. அந்தச் சேவையின் பரந்த மற்றும் பல்வகைப்பட்ட நிகழ்ச்சிகளின் தொகுப்பைப் பற்றி விரிவாக எழுதப் பல தகவல்கள் உண்டு. அவற்றையெல்லாம் தொகுத்தால் ஒரு பெரிய புத்தகமாகவே வெளியிடலாம்.
வர்த்தக சேவை தினமும் அதிகாலை 5:00 மணிக்கு "கீதாஞ்சலி" என்ற பக்திப் பாடல்களுடன் தொடங்குகிறது. இது நேயர்களுக்கு ஒரு நிம்மதியான தொடக்கத்தை அளிக்கிறது. அதைத் தொடர்ந்து, "ஆனந்த கானங்கள்" (5:15) மற்றும் காலத்தால் அழியாத பாடல்களைக் கொண்ட "என்றும் இனியவை" (5:30) நிகழ்ச்சிகள் 2000ஆம் ஆண்டில் ஒலிபரப்பாகின. காலை 6:00 மணிக்கு ஒலித்த "காலைத்தென்றல்" நிகழ்ச்சி, அன்றைய நாளுக்குரிய உற்சாகத்தை அளித்தது. காலை 6:30 மணிக்கு ஒலிபரப்பாகிய "செய்தி அறிக்கை" மூலம், நேயர்கள் அன்றைய முக்கிய நிகழ்வுகளை அறிந்துகொள்ளும் வாய்ப்பைப் பெற்றார்கள். நிகழ்ச்சிக் குறிப்புகள், சொந்தமான சந்தங்கள் மற்றும் 8:00 மணிக்கு ஒலித்த "பொங்கும் பூம்புனல்" போன்ற புகழ்பெற்ற நிகழ்ச்சி காலை நேரத்தை இசை மழையால் நிறைவு செய்தன.
நன்பகல் நிகழ்ச்சிகள், நேயர்களின் வெவ்வேறு ரசனைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டு இருந்தன. 9:00 மணிக்கு "ரதமேறும் புதுராகம்" போன்ற நிகழ்ச்சிகள் பாரம்பரிய இசையை விரும்பும் நேயர்களைக் கவர்ந்தது எனலாம். காலை 9:01, 10:01, மற்றும் 15:00 மணிக்கு ஒலிபரப்பாகிய "செய்திச் சுருக்கம்" மூலம், செய்திகள் அவ்வப்போது வழங்கப்பட்டு இருக்கின்றன. 10:00 மணிக்கு ஒலித்த "கதம்பமாலை" பல்வேறு வகையான பாடல்களின் தொகுப்பைக் கொண்டிருந்தது. 11:00 மணிக்கு "பாட்டொன்று கேட்போம்" மற்றும் 11:30 மணிக்கு "திரை தந்த இசை" போன்ற நிகழ்ச்சிகள் திரைப்பட இசையின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கின்றன. மதியம் 12:00 மணிக்கு ஒலித்த "நீங்கள் கேட்டவை" நேயர்களின் விருப்பப் பாடல்களுக்கான ஒரு பிரபலமான நிகழ்ச்சியாக இருக்கிறது எனலாம். மதிய உணவு நேரத்திற்குப் பிறகு 1:00 மணிக்கு "சித்திர கானம்" மற்றும் 1:30 மணிக்கு ஹிந்திப் பாடல்கள் போன்ற நிகழ்ச்சிகள் இந்திய நேயர்களுக்கு வித்தியாசமான ராகங்களை வழங்குகின்றன.
மதியத்திற்குப் பிந்தைய நிகழ்ச்சிகள், குறிப்பாகப் பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்தது. 2:30 மணிக்கு ஒலித்த "மகளிர் கேட்டவை" அவர்களுக்குச் சிறப்புத் தேர்வுகளை வழங்குகியது. "மலரும் மங்கையும்" (3:01) மற்றும் "முத்துக் குவியல்" (3:30) ஆகியவை மேலும் பல பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளாக அமைந்து இருந்தன. மாலையில் 4:30 மணிக்கு ஒலிக்கும் "இன்றைய நேயர்" நிகழ்ச்சி, நேயர்களுடன் ஒரு நேரடித் தொடர்பை ஏற்படுத்தியது எனலாம். இலங்கை மட்டுமல்லாது தமிழக நேயர்கள் மத்தியிலும் புகழ்பெற்ற நிகழ்ச்சியாக இது இருந்தது. இது வானொலி நிலையத்துக்கும் நேயர்களுக்கும் இடையே ஒரு நெருங்கிய பிணைப்பை உருவாக்கியது. 5:15 மணிக்கு ஒலிபரப்பாகிய "பிறந்தநாள் வாழ்த்துக்கள்" நேயர்களின் குடும்ப நிகழ்வுகளில் வானொலியின் பங்கை உறுதிசெய்தது. இந்த நிகழ்ச்சியின் ஊடாக இலங்கை வானொலி குடும்பதின் ஒரு அங்கமாகியது எனலாம். மாலை 5:30 மணிக்கு மீண்டும் ஒலித்த "நீங்கள் கேட்டவை" நிகழ்ச்சி, வேலை முடிந்து வீடு திரும்பும் மக்களுக்கு இசை விருந்தை அளித்தது. இந்த நிகழ்ச்சி நேயர்கள் மத்தியில் புகழ்பெற்றது என்பதாலேயே, மீண்டும் இந்த நிகழ்ச்சி அந்த காலத்தில் ஒலிபரப்பு செய்யப்பட்டது.
மாலை 6:00 மணிக்கு மீண்டும் ஒரு முழுமையான "செய்தியறிக்கை" வழங்கப்பட்டது. அதன் பிறகு 6:15 மணிக்கு "அந்திநேர சிந்துக்கள்" மற்றும் 7:00 மணிக்கு "தேனிசைத் தெரிவுகள்" போன்ற நிகழ்ச்சிகள், அன்றைய தினத்தின் இறுக்கத்தைக் நேயர்கள் மத்தியில் குறைத்தது, இரவுப் பொழுதிற்கு ஒரு அமைதியான சூழலை உருவாக்குகியது. இரவு 9:00 மணிக்கு மீண்டும் செய்திகள் அறிவிப்புகள் வழங்கப்பட்டன. நிறைவாக, இரவு 9:15 மணிக்கு "இரவின் மடியில்" நிகழ்ச்சி ஒலிபரப்பாகியது, இது கேட்பவர்களை நிம்மதியான உறக்கத்திற்குத் தயார்ப்படுத்தியது. வர்த்தக சேவை ஒலிபரப்பு இரவு 10:00 மணிக்கு நிறைவடைந்தது.
இந்த நிகழ்ச்சி நிரல், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் வர்த்தக சேவையானது இசை, செய்தி மற்றும் நேயர் பங்கேற்பு நிகழ்ச்சிகளின் மூலம் ஒரு சீரான மற்றும் பல்வகைப்பட்ட சேவையை வழங்கியது என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. இவ்வாறான நிகழ்ச்சிகள் பல தலைமுறைகளுக்குப் பொழுதுபோக்கு ஊடகமாகச் செயல்பட்டு, இன்றும் நேயர்களின் நினைவில் நீங்கா இடம்பிடித்துள்ளன எனலாம்.

No comments:
Post a Comment