Thursday, August 28, 2008

தமிழ் மையம் ஜெகத் கஸ்பார் சிறப்பு பேட்டி - பாகம் 3

தாங்கள் சமுதாய வானொலிக்காக ஒரு அமைப்பினை ஏற்படுத்தினீர்கள், அது எந்தஅளவில் உள்ளது?
சமுதாய வானொலி தொடர்பாக வேலைகளில் இருக்கும் பொழுது தான் நான் ‘திருவாசகத்தினை சிம்பொனியில்’ தயாரிக்கத் துவங்கியிருந்தோன். இளையராஜாவோடு இணைந்து செயல்பட்ட அந்தக்கால கட்டத்தில் அவரால் ஏராளமான பொருள் இழப்புக்கு ஆளாக்கப்பட்டேன். அந்த சமயத்தில் நான் திருவாசகத்தினை எடுக்காமல் சமுதாய வானொலித் துறையில் இறங்கி இருந்தால், இன்று தமிழ் நாட்டில் ஒரு தாக்கத்தினை நிச்சயமாக ஏற்படுத்தி இருந்திருப்பேன். அதன் பின் தமிழ் மையத்தினூடாக மரபுச் சார்ந்த கலைகளில் ஒரு கவனம் செலுத்தத் தொடங்கினேன். அதனுடைய விளைவாகத்தான் இன்று நமக்கு ‘சென்னைச் சங்கமம்’ கிடைத்தது. பாரம்பரிய மரபுக்கலைகளுக்கு ஒரு புத்துயிரும், புத்தெழிச்சியும் கிடைத்தது.

தமிழ் மையம் வேறு எந்தப் பணிகளைச் செய்து வருகிறது?
அடித்தட்டு மக்கள் சார்ந்த பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்பட்டு வருகிறோம். குறிப்பாக ஏழைகளுக்கான கல்வி, நவீனத்துவத்தின் கனிகளை ஏழை மாணவர்களுக்கு எப்படி கொண்டு போய் சேர்ப்பது போன்ற வகையில் இயங்குகின்றோம். மனதிற்கு திருப்தியான வகையில் இந்தப் பணிகள் சென்று வருகிறது.

வேரித்தாஸ் - சென்னைச் சங்கமம் : எது மகிழ்ச்சி அளிக்கிறது?

வேரித்தாஸ் தமிழ்பணி என்னை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களுக்கு அறிமுகப்படுத்தியது, குறிப்பாக புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்களுக்கு எனக் கூறலாம். திருவாசகமும், சென்னை சங்கமமும் தமிழக மக்களுக்குக் என்னை அறிமுகப்படுத்தின.

தங்களால் தொடங்கப்பட்ட Intamil24.com இணைய வானொலி எந்த அளவிற்கு உள்ளது?
Intamil24.com நன்றாக தொடங்கி, நன்றாகவேச் செயல்பட்டது ஒரு குறுகிய காலம். ஆனால் மீண்டும் அதில் ஒரு கவனம் செலுத்தி அதனைக் கட்டியெழுப்பத் தவறிவிட்டேன் என்றுதான் சொல்ல வேண்டும். காரணம் ‘சென்னை சங்கமம்’ போன்ற புதிய செயல்பாடுகளில் இறங்கிவிட்டதால், நேரமின்மைக் காரணமாக நிறுத்த வேண்டியதாக ஆனது.

சென்னைச் சங்கமம் வானொலியோடு இணைந்து செயல்படுமா?
இந்த கேள்வியை வானொலிகளிடம் கேட்க வேண்டும். வானொலி நிலையங்கள், இதனை மக்களுக்கு எடுத்துச் செல்லவேண்டும், இதைப் பற்றிய திறணாய்வுகள், விமர்சனங்கள் மற்றும் புதிய பார்வைகளை வானொலிகளும் நேயர்களுக்கு வைக்கலாம். நேயர்களும் வானொலி ஊடாக எங்களுக்கு வைத்திருக்கலாம். உலக வானொலிகளோடு ஒன்றிணைந்து, ஒரு சுற்றுலா நிகழ்வாக, உலக தமிழர்கள் தாழ் தமிழகத்தோடு ஒரு நிகழ்வாக ஒவ்வோரு வருடமும் நடத்தலாம். சர்வதேச தமிழ் வானொலிகளுக்கு இதன் மூலம் ஒரு வேண்டுகோளை வைக்கிறேன்.

சிற்றலை வானொலியின் எதிர்காலம் எப்படி இருக்கும்?
நீங்களும் நானும் முடிவு செய்கின்ற விசயமாக இந்தக் கேள்வி இருக்காது. தொழில்நுட்பம்தான் இதனை முடிவு செய்யும். தொழில் நுட்பம் எளிமைப்படுவதோடு மலிவானதாகவும் மாறும். வரும் காலத்தில் தொலைக்காட்சி, வானொலி, இணையம், செய்தித்தாள் போன்ற அனைத்தும் ஒரு வாயில் வழியாக வெளிவரும் நிலைமை வெகு சீக்கிரத்தில் வரும்.

வருங்காலத்தில் சமுதாய வானொலித் தொடங்கும் எண்ணம் உள்ளதா?
Community Radio எனப்படும் ‘சமுதாய வானொலி’ இன்னும் என் மனதை விட்டு முழுமையாகப் போகவில்லை. மனதில் ஆசை இருக்கிறது. ஆனால் ஆண்டவன் ஒரு நாளைக்கு 24 மணிநேரம் தான் தந்திருக்கிறான். முன்னர் 18 மணிநேரம் உழைக்க முடிந்தது, இப்பொழுது 12 மணிநேரம் தான் உழைக்க முடிகிறது. சந்திப்பு : தங்க ஜெய்சக்திவேல் -98413 66086.

No comments: