Monday, August 25, 2008

தமிழ் மையம் ஜெகத் கஸ்பார் சிறப்பு பேட்டி-பாகம் 1

வேரித்தாஸ் தமிழ்பணியின் ஊடாக சிற்றலை நேயர்கள் மத்தியில் பரவலாக அறியப்பட்டவர்,இன்று ‘திருவாசகம்’ மற்றும் ‘சென்னை சங்கமத்தின்’ ஊடாக வானொலி கேட்காத நேயர்கள் மத்தியிலும் வெகுவாக அறியப் பட்டவர், அருட்பணி ஜெகத் கஸ்பார் ராஜ்.தமிழ் பணியில் ஏழு ஆண்டுகாலம் பணியாற்றிய போது பல்வேறு முன்முயற்சிகளை மேற்கொண்டார்.அதில் மிக முக்கியமானது ‘உறவுச் சங்கம’ விழாக்கள். நேயர்கள் மத்தியில் புகழ்பெற்ற இந்த சங்கம விழாக்கள் இன்றும் தொடர்ந்து நடைபெறுகிறது. ‘நாம் நண்பர்கள்’ எனும் நேயர்களின் முகவரிகள் அடங்கிய தொகுப்பினை வெளியிட்டது தமிழ் சிற்றலை வானொலி வரலாற்றில் முதல் முறை எனலாம். அதன் மூலம், இன்றும் தொடர்பில் உள்ள நேயர்கள் ஏராளமானோர், ஜெகத் கஸ்பார் அவர்களுக்கு நன்றி சொல்லக் காத்திருக்கின்றனர். தனது பல்வேறு அவசரப் பணிகளுக்கு இடையிலும், நமது இதழின் ஆண்டு மலருக்கு அவர் வழங்கியச் சிறப்புச் செவ்வி இதோ......

இன்றைய சூழ்நிலையில் சர்வதேச வானொலிகளின் முக்கியத்துவம் எந்த அளவில் உள்ளது?
எனக்கு, நிபுணத்துவ ரீதியாக இதற்கு பதில் சொல்லத் தெரியாது. ஆனால் ஒரு அனைத்துலகவானொலியில் ஏறக்குறைய ஏழு ஆண்டுகாலம் கடமையாற்றினேன் என்ற வகையில், பதில் சொல்லமுடியும். வெகுஜன ஊடகங்கள் கையில் எடுத்துக்கொள்ளாத, அணுகாத மானுடப் பிரச்சினைகளை,சமூகப் பிரச்சினைகளை அணுகினால் அவை தொடர்ந்து முக்கியத்துவம் பெறுவதாக இருக்கும்.அவற்றுக்கு என ஒரு சிறு தளத்தினை வரையறுத்துக் கொண்டோ, அல்லது வெறும் செய்தியைதருவதோ அல்லது விளம்பரங்களுடன் கூடிய போழுதுபோக்கு நிகடிநச்சிகளைத் தருவது என்றால்,அதைத் தருவதற்கு இங்கு வெகுஜன வானொலிகள் நிறையவே இருக்கின்றன. அவற்றை விரும்பிக் கேட்பவர்கள், அறிவுத்தகவல்களைக் கூட ஒரு புதிய கோணத்தில் இருந்து திறனாய்வுடன் ஆழமாக ஒரு விசயத்தினைப் புரிந்து கொள்வது இங்கு சாத்தியமில்லை என்றுதான் சொல்லவேண்டும்.

சிற்றலை வானொலி கேட்கும் நேயர்கள் இன்று எங்கு அதிகமாக உள்ளனர்?பொதுவாகவே சிற்றலை ஒலிபரப்புகளைக் கேட்கக்கூடிய நேயர்கள் பெரும்பாலும் பிரச்சனை நடக்கின்றப் பகுதிகளில்தான் அதிகமாக உள்ளனர். குறிப்பாக யுத்தங்கள் நடக்கின்றப் பகுதிகளில் நேயர்கள் மிக அதிகமாகக் கேட்கின்றனர். இந்தப் பகுதிகளில் உள்ள நேயர்களுக்காகச் சரியாகப் பணியாற்றினால் சிற்றலை வானொலிகளுக்கு நல்ல வரவேற்பு இருக்கின்றது. (தொடரும்..)

No comments: