Monday, August 04, 2008

தனியார் பண்பலைகள்: கடிவாளம் இல்லாத குதிரை

உலகை உள்ளங்கைக்குள் அடக்கும் உன்னதக் கணிப்பொறித் தொழில்நுட்பம் விண்வெளி ஆராய்ச்சியில் வியத்தகு முன்னேற்றம். ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று கருதப்படுகின்றஊடகத்துறையில் எத்தனையோ மாற்றங்கள்.
இவற்றிற்கிடையில் இன்றும் வானொலியின் குரல் ஓங்கி ஒலித்துக் கொண்டிருப்பது வானொலிக்குக்கிடைத்த வெற்றியாகும். வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கெதிரான விடுதலைப் போராட்டத்தில் மண்ணின் மைந்தர்களிடையே தேசப்பற்றை, விடுதலை வேட்கையை ஊட்டி உணர்வு பெறச் செய்ததில் வானொலிக்கு அளப்பரிய பங்கு உண்டு.
அந்த வகையில் ஏழை, எளிய மக்களின் உயிர்மூச்சாக, செய்திப் பெட்டகமாக விளங்கிய வானொலி அண்மைக்காலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப புரட்சி காரணமாக தன் உண்மை முகத்தை இழந்து அல்லது மறைத்து பொழுதுபோக்கு எனும் முகமூடி அணிந்து ‘பண்பலை’ என்னும் புதிய அவதாரம் எடுத்துள்ளது.
வானொலியின் புதிய அவதாரமான பண்பலைகளின் எண்ணிக்கை கிராமங்கள், நகரங்கள்,பெருநகரங்கள் என்ற வேறுபாடின்றி பல்கிப் பெருகிய தோடு மட்டுமன்றி ‘வானொலி ஒலிக்காதவீடே இல்லை’ என்ற நிலையை மாற்றி ‘பண்பலை ஒலிக்காத வீடே இல்லை’ என்ற சூழல் தற்போதுஉருவாக்கி உள்ளது.
இதன் காரணமாகவோ என்னவோ, எப்படி கடிவாளம் இல்லாத குதிரை தாறுமாறாக ஓடுகின்றதோ அதைப் போல கட்டுப்பாடு எனும் கடிவாளம் இல்லாமல் தனியார் பண்பலைகள் சமூகத் தளத்திலிருந்து விலகி இளைஞர்கள் மத்தியில் சிந்தனைச் சிதறல்களை உருவாக்கி பண்பாட்டுச் சிதைவுகளைப் பதியவைக்கும் வரம்பு மீறிய நாகரிக மோசடியை நாளும் நிகழ்த்தி வருவது வானொலியின் உண்மை நேயர்களை வேதனைக்குள்ளாக்குகின்றது.
கல்வி, விவசாயம், வேலைவாய்ப்பு, இசை, இலக்கியம், நாடகம், நாட்டியம், பொழுதுபோக்கு என்று பல்துறை நிகழ்ச்சிகள் பண்பாட்டு, கலாச்சார சீரழிவின்றி வானொலியால் வழங்கப்பட்டு வருகின்றது. ஆனால் எந்த அளவிற்குப் புதிது, புதிதாக பண்பலைகள் (தனியார்) உருவாகின்றதோ அதேபோல்எவ்விதக் கட்டுப்பாடும் இல்லாமல் நிகழ்ச்சிகளும் ஒலிபரப்பப்படுவதால் பண்பாடும், கலாச்சாரமும் இன்று கேலிக்கூத்தாக்கப்பட்டுள்ளன.
மக்களின், இளைஞர்களின் பொழுதை எவ்வாறேனும் போக்கடிப்பது குறிக்கோள் என்ற ரீதியில் 24 மணி நேரமும் பண்பலைகளின் குரல் ஓய்வின்றி ஒலித்து வருகின்றது. புதிய புதிய நிகழ்ச்சிகளை அறிமுகம் செய்யும் ஆர்வத்தில் மேற்கத்திய கலாச்சார நடைமுறைகளை அப்படியே தங்களுக்கேற்ற பாணியில் மாற்றம் செய்து ஒலிபரப்புகின்றனர்.
மேலும் வணிக ரீதியிலான போட்டி, ஒலிபரப்பில் முன்னணி பெற்றிட முயலும் துடிப்பு காரணமாகபண்பலைகள் அடிக்கும் லூட்டி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவது கவலையளிப்பதாகஉள்ளது.
எந்த பண்பலையானாலும் இளைஞர்கள்தான் அதன் மையப்புள்ளி. இளைய சமுதாயத்தைச் சுற்றியேஅனைத்து நிகழ்ச்சிகளும் உருவாக்கப் படுகின்றன. இளைஞர்களைக் கவர்வதற்காகப் பொருந்தாத நிகழ்ச்சிகளைக்கூடப் பண்பலைகள் ஒலிபரப்பத் தயங்குவதில்லை,
கேலிக்கூத்துக்கு மகுடம் சூட்டும் வகையில் ‘ரேடியோ ஜாக்கிகள்’ எனும் தொகுப்பாளினிகளின் புன்னகை கலந்த புரிதலற்ற பேச்சு, ஆங்கிலக்கலப்புடன் கூடிய வார்த்தை ஜாலம், சிந்திக்கத்தூண்டாதபுதிர் வினாக்கள் பொது அறிவிற்குப் பொருந்தாக் கேள்விகள்...இப்படிப்பல!
பேசுபவர்க்கும் கேட்பவர்க்கும் என்னவென்று புரியாமல் போகும் நிகழ்ச்சிகளால் சமூகத்திற்கு என்ன பயன் கிட்டும் என்பது தெரியவில்லை. இளைஞர்களைத் தங்கள் பண்பலை நோக்கி கவரஇப்படிப்பட்ட பண்பாட்டுச் சீர்குலைவு நிகழ்ச்சிகளை வழங்கிட இவர்களிடம் யார் கேட்டது?
(தொடரும்...)
- ரா. வெங்கடேஷ் ஜூலை 2008 சர்வதே வானொலி இதழில் இருந்து...

No comments: