Saturday, August 02, 2008

தெரிந்தே தொலைத்த பொக்கிஷம்

காலம் காலமாக தமிழர்களின், தமிழ்ப் பாடல்களின் அடையாளமாக இருந்த இலங்கை வானொலி (கொழும்பு சர்வதேச வானொலி) கடந்த 31-05-2008 அன்று நிறுத்தப்பட்டுவிட்டது. ஏதோ ஒரு வானொலிக்கு எதையோ ஒன்று எழுதிப் போட்டுவிட்டு ‘டி’சர்ட் வாங்குவதற்காக அல்லாமல், ‘டூர்’ கூட்டிட்டு போவாங்க’ என்று அலையும் கூட்டமாகவும் அல்லாமல், ‘கலாச்சாரத்தை’ தெரிந்து கொள்கிறேன் பேர்வழி என்று சம்பந்தமே இல்லாமல் எங்கோ சென்று சந்தோசத்தில் வாழ்க்கையை நான்கு நாட்களில் அனுபவித்து முடித்த சிரிப்பை சிந்துகின்ற, அரிதாரங்கள் பூசியவர்களாக அல்லாமல், கொடுக்கிற நாலணா பேனாவில் நாட்கள் முச்சூடும் போற்றிப் பாதுகாக்கிற
கூட்டமாகவும் அல்லாமல் இருந்த ஒரு பண்பாட்டு வட்டம், பாட்டுக் கூட்டம் காலக் கொடுமையில் கால எல்லைகளைக் கடந்து கற்கால மனிதன் போல நடந்து கொண்ட விதம் இன்று, தான் எந்த ஜென்மத்திலும் திரும்ப பெறமுடியாத தெய்வ வரத்தை இழந்து தவிக்கிறது.
என்னதான் விளம்பரங்கள் மூலம் கிடைத்த கணிசமான வருமானங்கள் குறைந்து போனாலும், இத்தனை வருடங்களாக நம்மை நம்பியிருக்கும் தமிழக நேயர்களை ஏமாற்றக் கூடாது என்ற ஒரே உள்ளக்கிடக்கையில் 1990-களில் “கொழும்பு சர்வதேச வானொலி” அற்புதமான பல நிகழ்ச்சிகளை வழங்கியது, அதில் “கவிதை செண்டு, முத்தமிழ் ஆரம், இன்றைய நேயர், உங்கள் விருப்பம், வானொலி மலர், நெஞ்சில் நிறைந்தவை, ஆனந்த கானங்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், கதம்பம், இசை இன்பம், பாட்டும் பதமும்” ஆகியவற்றை நேயர்களை மனதில் வைத்து ஒலிபரப்பியது. (உலக தமிழ் வானொலிகளில் இந்த மாதிரி பெயரையாவது யாருக்காவது வைக்கத் தெரியுமா?)
இதற்கொரு பெரிய சரித்திரம் இருக்கிறது, 1956-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இலங்கை வானொலியின் மத்திய அலை ஒலிபரப்பு, 1980-களில் இனப் பிரச்னையின் போது நிறுத்தப்பட்டது. பிறகு அது சிற்றலை மற்றும் பண்பலைக்கு சென்று அங்கு நிலை கொண்டது. அதற்கு பெயர் “வர்த்தகச் சேவை”, அதன் பிறகு “தென்றல்” ஆனது. இது இப்பொழுதும் வந்து கொண்டுள்ளது. ஆனால், இண்டெர்நெட்டில் நமக்கு தற்பொழுது www.slbc.lk-ல் கேட்கலாம்.
அன்று “வானொலி பிதாமகன்” எ°ஸ்.பி. மயில்வாகனன், கே.எ°ஸ். ராஜா, பி. ஹெச். அப்துல் அமீது, திருமதி ராஜேவரி சண்முகம் ஆகியோர் கலக்கிக்கொண்டு இருந்த இலங்கை வானொலி அதன் பிறகு வர்த்தகச் சேவை என பெயரிடப்பட்டது. முன்பே குறிப்பிட்ட, மத்திய அலையில் நமது தமிழக நேயர்களுக்காக 1990-களில் ஆரம்பிக்கப்பட்ட ஒலிபரப்பு, ‘பரீட்சார்த்த ஒலிபரப்பு’ “மத்திய அலை சிறப்பு ஒலிபரப்பு என மருவி, 90- களின் மத்தியில் “கொழும்பு சர்வதேச வானொலி”
என கொடிகட்டி பறந்து, நான்கைந்து வருடங்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட தமிழ்நாட்டின் சூரியன் எப். எம் தாக்கத்தினாலும், அரசு பண்பலையான எப். எம் ரெயின்போவினாலும் சாரம் இழந்தது. இருப்பினும், தொடர்ந்து இலங்கை வானொலியின் கொழும்பு சர்வதேச வானொலியின் நிகழ்ச்சிகள் நமக்கு நேரம் குறைக்கப்பட்ட நிலையில் வந்து கொண்டே இருந்தன. அப்பொழுதுதான் இந்த ஆபத்து வந்தது.
நமது நாட்டின் பண்பலைகளில் நாகரீகமாகவும், ஒழுங்காகவும் பேசிக்கொண்டு இருக்கும் நமது நேயர்கள் இலங்கை வானொலி அறிவிப்பாளர்களுடன் பேசும்போது மட்டும் எங்கோ மனசாட்சியைக் கழட்டி வைத்துவிட்டு செல்கிறார்கள்.இது மட்டும்தான் காரணமா என்றால், ஆமாம் இதுவே பிரதான காரணம். இலங்கை வானொலியும் அதன் அறிவிப்பாளர்களும் நேயர்களுக்காக எது வேண்டுமானாலும் செய்வார்கள். ஆள் இல்லாமல் பாட்டுகூட போடுவார்கள், நிகழ்ச்சி நடத்துவார்கள் ஆனால் நேயர்கள் வாய்க்கு வந்தமாதிரி பேசுவதை கேட்டுவிட்டு சும்மா இருக்கமாட்டார்கள்....
தமிழா.... உனக்கு என்னவொரு நல்ல பழக்கம்.... காலங்காத்தால எழுந்தவுடன் 7.00 மணிக்கு இண்டர்நேஷனல் கால் போட்டு வாய்க்கு வந்த மாதிரி பேசுவது! இதில் அரசியல் வேறு “அவரின் பெயர் இத்தனை தடவை வந்து விட்டது. என் பெயர் மட்டுமே இனி வர வேண்டும், அவனை அழுத்தி வைக்க என்ன சூழ்ச்சி செய்யலாம்”.
தாங்காது சாமி, கொழும்பு சர்வதேச வானொலி மட்டுமல்ல, எந்த ஊடகமும் தாங்காது. சரி , உங்களுக்கு Phon-லாவது பேசத் தெரியும!? செலவாயிடும் என்றால் ஏன் பேசுறீங்க? எதிரில் இருக்கும் அறிவிப்பாளரை பேச விடாமல், பெரும்பாலான நேயர்கள் மூச்சை கட்டி பேசி தன் சொந்த பந்தம், சிநேகிதம், உலகில் உள்ள அத்தனை பேரையும் சொல்லி முடிச்சு, சொல்லாமல் கொள்ளாமல் ‘கட்’ செய்து விடுகிறார்கள், இவற்றையெல்லாம் இத்தனை நாள் அவர்கள் பொறுத்துக் கொண்டு தான் இருந்தார்கள்.
நான் இந்தக் கட்டுரையில் சொல்லியதெல்லாம் கொஞ்சம் தான். முழுவதும் எழுதினால் தாங்காது நெஞ்சம்!! நேயர்களுக்காக வானொலி நிகழ்ச்சிகளை வழங்குகிறார்கள் என்றால் நேயர்கள் எதுவேண்டுமானாலும் செய்யலாம்., எல்லாவற்றையும் அவர்கள் பொறுத்துக்கொண்டு இருக்க வேண்டுமா என்ன?
இதற்கு அந்த ‘டி’ சர்ட் வாங்குபவரும், ‘கலாச்சார’ டூர் போகிறவரும் எவ்வளவோ பரவாயில்லை. ஒழுங்காக ழைய பாடல்கள் வழங்கி, அரிதான முத்துச்சரங்கள் கோர்த்து அழகு பார்த்து நேயர்களை தலைமேல் தூக்கிவைத்த ஒரு வானொலியை, உலகிலேயே பழமை வாய்ந்த பெரும் அமைப்பை சிதைத்து சின்னாபின்னாபடுத்திவிட்டு, சில்மிஷ சிரிப்பை உதிர்த்து கொண்டிருக்கிற இந்த மூடுவிழா மன்னர்களுக்கு மன்னிப்பேகிடையாது.
இலங்கை வானொலி சாதித்ததும்ஏராளம், நேயர்களை சாதிக்க வைத்ததும் ஏராளம்.இப்பவும் கூறுகிறேன், ஒலிபரப்பை நிறுத்தி விட்டதால் தரத்தில் மட்டும் இலங்கை வானொலி எப்பொழும் தாழ்ந்துவிடாது. இதற்கு இணையான வானொலி இப்பொழுது மட்டுல்ல, எப்பொழுதும் இல்லை. காலம் நம்மை மன்னிக்கட்டும் - விஜயராம் எ. கண்ணன்.

No comments: