Thursday, August 14, 2008

சென்னையில் அதிக மக்கள் விரும்பும் பண்பலை

சர்வதேச வானொலி இதழ் வெற்றிகரமாக தனது புதிய பரிமாணத்தோடு பத்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்தப் பத்து ஆண்டுகளில் இதழ் படிப் படியான வளர்ச்சியையும், பாராட்டுகளையும், பலதரப் பட்ட மக்களிடமிருந்து பெற்று வருகிறது. நாளுக்கு நாள் பண்பலைகளின் எண்ணிக்கையும், பெருகிக் கொண்டே வருகிறது. சென்னையில் மட்டும் தனியார், அரசுப் பண்பலைகளின் எண்ணிக்கை பத்து. ஒவ்வொரு பண்பலையும் தன்னை முதன்மைப் படுத்துவதில் தீவிரம் காட்டி வருகின்றன. அது ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட சூரியன், ரேடியோ மிர்ச்சி போன்ற பண்பலைகளானாலும் சரி, புதிதாக தொடங்கப்பட்ட ஹலோ,ஆஹா பண்பலையானாலும் சரி. சர்வதேச வானொலி இதழ் முழுக்க, முழுக்க வானொலி சார்ந்த செய்திகளையும், வானொலியின் தொழில் நுட்பங்களின் வளர்ச்சி குறித்த கட்டுரைகளை மட்டுமேவெளியிட்டு வரும் ஒரே தமிழ் இதழ் என்பது அனைவரும் அறிந்த விஷயம்தான். நமது இதழ் பத்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த இனிமையான நேரத்தில் சென்னையில் பண்பலைகளுக்கு மக்கள் மத்தியில் இருக்கும் வரவேற்பினை அறிய முதன்முறையாக எவ்வித விருப்பு, வெறுப்புகளும் இன்றி, சுமார் ஆயிரம் பேரிடம் நேரடியாக சில வினாக்களுடன் தொடர்பு கொண்டோம். அதன்படி, ரேடியோ மிர்ச்சி 98.3 எப். எம், அதிக அளவில் மக்கள் விரும்பும் பண்பலையாக உள்ளது. மக்களுக்கு அதிக அளவில் பரிசுகளைத் தரும் பண்பலையாக ரேடியோ ஒன் மற்றும் ரேடியோ மிர்ச்சியைத் தேர்வு செய்துள்ளனர். தனியார் பண்பலைகளின் படையெடுப்புகளுக்கு இடையேயும், மத்திய அரசின் ரெயின்போ எப்.எம் ஒட்டுமொத்த மதிப்பீட்டில் மூன்றாவது இடத்தைப் பிடித்திருப்பது ஆறுதலான விஷயம். ஆனால், இதனைத் தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ள இன்னும்முனைப்புடன் செயல்படவேண்டிய கட்டாயத்திலிருக்கிறது ரெயின்போ எப்.எம். இந்தக் கருத்துக் கணிப்பின் முடிவு சில விஷயங்களைத் தெளிவுபடுத்தும் விதமாக உள்ளது. அதன்படி வானொலியில் தாங்கள் கேட்கும் நிகழ்ச்சியானது வெறும் பொழுதுபோக்கு அம்சமாகவோ, அல்லது நேரத்தை வீணடிக்கிற நிகழ்ச்சியாக மட்டுமோ இருந்தால் போதாது என்பதைப் பிரதிபலிப்பதாகவேமக்களின் மதிப்பீடு இருக்கிறது. அதனால்தானோ என்னவோ ஆண்டாண்டுகளாக கோலோச்சி வந்த சூரியன் பண்பலையை மக்கள் கொஞ்சம், கொஞ்சமாக மறக்கத் தொடங்கி விட்டதாகவே தெரிகிறது. (தொடரும்)

No comments: