Tuesday, August 12, 2008

இலங்கை வானொலியில் தமிழ் ஒலிபரப்பு நிறுத்தம்: கடலூர் நேயர்கள் கண்டனம்

லங்கை வானொலியில் தமிழ்ஒலிபரப்பு நிறுத்தப்பட்டதற்கு கடலூர் நேயர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

திடீர் நிறுத்தம்
இலங்கை சர்வதேச வானொலியில் 84 ஆண்டுகளாக தமிழ் ஒலிபரப்பு நடந்து வந்தது. இந்த ஒலிபரப்பை தமிழக நேயர்கள் விரும்பி கேட்டு வந்தனர். இந்த நிலையில் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி திடீரென இலங்கை வானொலியின் தமிழ் ஒலிபரப்பு நிறுத்தப்பட்டது. இதற்கு கடலூர் வானொலி நேயர் மன்றத்தைச்சேர்ந்த சிதம்பரம் ரமணி ராஜேஷ், கே.தமிழ்வாணன், பெரியசாமி ராஜா, வைத்தீசுவரன்கோவில் தாமரைச்செல்வி ஆகியோர் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது.

முதல் தமிழ்ஒலிபரப்பு
கடந்த 1924-ம் ஆண்டு இலங்கை சர்வதேச வானொலி தொடங்கப்பட்டது. தூய தமிழில் புதுமையான நிகழ்ச்சிகளை வழங்கி தமிழகத்தில் தனக்கென்று நேயர்கள் வட்டத்தை உருவாக்கிய பெருமை இலங்கை வானொலிக்கு உண்டு.

சர்வதேச அளவில் லண்டன் பி.பி.சி., சிங்கப்பூர், மலேசியா, பாகிஸ்தான், வாய்ஸ் ஆப் அமெரிக்கா, ஜெர்மன் ரேடியோ, ஆஸ்திரேலியா போன்ற வெளிநாட்டு வானொலி நிலையங்கள் தமிழ் நிகழ்ச்சிகளை ஒலிபரப்புகின்றன என்றாலும், முதன் முதலில் தமிழ் ஒலிபரப்பை தொடங்கிய பெருமையும் இலங்கை வானொலிக்கு உண்டு.

டி.வி.க்கள் இல்லாத காலத்தில் பட்டிதொட்டியெங்கும் இலங்கை வானொலி தான் பொழுது போக்கு சாதனமாக இருந்தது. இந்த நிலையில் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் தமிழ் ஒலிபரப்பை இலங்கை வானொலி நிறுத்தியது நேயர்களிடையே கடும் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே மீண்டும் தமிழ்ஒலிபரப்பை தொடங்க வேண்டும் என்று தினமும் எஸ்.எம்.எஸ். மூலமாக வற்புறுத்தி வருகிறோம்." இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Thanks to முதுவை ஹிதாயத், http://satrumun.com/localnews/?p=660

No comments: